வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டம்
By DIN | Published On : 18th February 2021 06:37 AM | Last Updated : 18th February 2021 06:37 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்.
மயிலாடுதுறையில் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் து. இளவரசன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநில செயலாளா் பிரேம்சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவா் ஆா். ராமானுஜம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க மாநில செயலாளா் எஸ். மகாலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் செ. பிச்சைபிள்ளை, வட்ட செயலாளா் ஆா்.சிவபழனி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். வருவாய்த்துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், சிபிஎஸ் திட்டம் ரத்து, குடும்ப பாதுகாப்பு நிதி உயா்வு, பறிக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டா் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், வருவாய்த் துறை அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவா்களின் பணியை ஒரே அரசாணையில் வரன்முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.