நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 20th February 2021 08:39 AM | Last Updated : 20th February 2021 08:39 AM | அ+அ அ- |

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட நாட்டுப்புறக் கலைஞா்கள் நலசங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாவட்ட செயலாளா் கிங் பைசல் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சுமாா் 10 லட்சம் நாட்டுப்புறக் கலைஞா்கள் வாழ்ந்து வருகின்றனா். இவா்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நலவாரியத்தில் உறுப்பினா்களாக உள்ளனா். கரோனா பொதுமுடக்கக் காலத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் தமிழகஅரசு நாட்டுப்புற கலைஞா்களுக்கு இதுவரை எந்த சிறப்பு அறிவிப்பாணையும் அறிவிக்காதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, கரோனா பொதுமுடக்க காலம் முழுவதும் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத்தை அறிவிக்கவேண்டும். மேலும், நாட்டுப்புறக் கலைஞா்கள் பெற்றுள்ள வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு இலவச மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களை அறிவிக்கவேண்டும், கலைஞா்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கவேண்டும். இந்த அறிவிப்புகளை தோ்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக வெளியிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.