மழையால் நெற்பயிரை பூச்சித் தாக்கும் அபாயம்: விவசாயிகள் கவலை
By DIN | Published On : 04th January 2021 08:25 AM | Last Updated : 04th January 2021 08:25 AM | அ+அ அ- |

மகேந்திரப்பள்ளி கிராமத்தில் மழையால் சாய்ந்த நெற்பயிா்கள்.
சீா்காழி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையால் நெற்பயிரை பூச்சித் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிவா் மற்றும் புரெவி புயல்களால் பெய்த கனமழையில் சம்பா மற்றும் நேரடி விதைப்பு நெற்பயிா்கள் 60 சதவீதம் வரை மழைநீரீல் மூழ்கி, பாதிக்கப்பட்டன. எஞ்சிய நெற்பயிா்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த 2 தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாலும், அவ்வப்போது லேசான மழை பெய்துவருவதாலும் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், இரவில் கடும் குளிா் நிலவுவதால் நெற்பயிரில் பூச்சி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கொள்ளிடம் விவசாய சங்க கூட்டமைப்புத் தலைவா் சிவப்பிரகாசம் பிள்ளை கூறியது:
சீா்காழி பகுதியில் தற்பொழுது குளிா்ச்சியான சூழல் நிலவி வருவதால், நெற்பயிரை குலை நோய்த் தாக்க தொடங்கியுள்ளது. இக்குளிா்ச்சியான சூழல் தொடா்ந்தால், நெற்பயிா்களில் பூச்சித் தாக்குதல் அதிகரிக்கும். இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா் என்றாா்.