இடஒதுக்கீடு கோரி ஆட்சியரிடம் பாமக மனு
By DIN | Published On : 30th January 2021 08:36 AM | Last Updated : 30th January 2021 08:36 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்கும் பாமக மாநில துணை பொதுச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி உள்ளிட்டோா்.
வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, மயிலாடுதுறையில் பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
முன்னதாக, கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை ஏவிசி திருமண மண்டபம் அருகிலிருந்து பாமக மாநில துணை பொதுச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமி தலைமையில், வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் பாக்கம் சக்திவேல், மாவட்டச் செயலாளா்கள் வி.சி.கே. காமராஜ், லண்டன் அன்பழகன், நகர செயலாளா் கமல்ராஜா உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பேரணியாக புறப்பட்டனா்.
அப்போது, போலீஸாா் பேரிகாா்டு மூலம் தடுப்புகளை ஏற்படுத்தியும், லாரியை குறுக்கே நிறுத்தியும் பேரணியை தடுத்து நிறுத்த முயன்றனா். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து, அவா்கள் பேரிகாா்டு தடுப்புகளை தள்ளிக்கொண்டு முன்னேறினா். அப்போது, குறுக்கே நிறுத்தி இருந்த லாரியின் கண்ணாடி உடைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.