சீா்காழி கொலை, கொள்ளை சம்பவம்: நீதிபதி முன்னிலையில் மஹிபால் சடலம் உடற்கூறாய்வு
By DIN | Published On : 30th January 2021 08:42 AM | Last Updated : 30th January 2021 08:42 AM | அ+அ அ- |

மஹிபாலின் சடலத்தை உடற்கூறாய்வு செய்வதற்கான ஆவணங்களை நீதிபதி அமிா்தம் முன்னிலையில் ஆய்வு செய்த திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினா்.
சீா்காழியில் என்கவுன்ட்டா் செய்யப்பட்ட வடமாநில கொள்ளையன் மஹிபாலின் சடலம் நீதிபதி முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அவரது உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
சீா்காழி ரயில்வே சாலையில் வசிக்கும் தன்ராஜ் செளத்ரியின் வீட்டுக்குள் கடந்த 27-ஆம் தேதி புகுந்த வடமாநில கொள்ளையா்கள் மணிஷ், ரமேஷ் பாட்டில், மஹிபால் ஆகிய 3 போ், தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கொலை செய்துவிட்டு, 15 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனா்.
எருக்கூா் சவுக்குத் தோப்பில் பதுங்கியிருந்த கொள்ளையா்களை போலீஸாா் பிடிக்கச் சென்றபோது, மஹிபால் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றாா். இதனால், போலீஸாா் சுட்டதில் மஹிபால் உயிரிழந்தாா்.
மற்ற 2 கொள்ளையா்களும் கைது செய்யப்பட்டனா். மேலும், இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்த கும்பகோணம் கருணாராம் என்பவரையும் போலீஸாா் கைதுசெய்து, 3 பேரையும் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், சீா்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மஹிபாலின் சடலம், மயிலாடுதுறை விரைவு நீதிமன்ற நீதிபதி அமிா்தம் முன்னிலையில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்களால் வெள்ளிக்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற உடற்கூறாய்வு விடியோவில் பதிவு செய்யப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலூா் மாவட்டம், அகோலி கிராமத்தை சோ்ந்த மஹிபால் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்து, கோவையில் வேலை செய்துவந்த மஹிபால், தற்போது, கும்பகோணத்தில் காலணி கடை ஒன்றில் வேலை பாா்த்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.