வேதாரண்யம் அருகேஅரசு நிலத்தில் இருந்த பனை மரங்களைவெட்டி லாரியில் கடத்த முயற்சி
By DIN | Published On : 02nd July 2021 12:00 AM | Last Updated : 02nd July 2021 12:00 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வியாழக்கிழமை அரசு நிலத்தில் இருந்த பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பனை மரங்களை வெட்டுவது சட்டவிரோதமானது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையில் பனை மரங்கள் உள்ள வேதாரண்யம் பகுதியில் இந்த தகவல் அண்மையில் கிராமங்கள்தோறும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு, பனை மரங்களை வெட்டப்படுவதைத் தடுக்க கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் தெற்குகாடு
பகுதியில் பனை மரங்கள் வெட்டப்பட்டு லாரியில் ஏற்றப்படுவதாக அந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா் அருள் என்பருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அவா் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தாா். சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்றபோது, பனை மரங்களை வெட்டி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த சிலா் தப்பியோடினா்.
இதையடுத்து மரத்துடன் லாரியை பறிமுதல் செய்து காவல்நிலையத்துக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். விசாரணையில், 10 பனை மரங்கள் வெட்டப்பட்டதும், அவை அரசு நிலத்தில் இருந்த மரங்கள் என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வாய்மேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பனை மரங்களை வெட்டிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.