பொதுமுடக்க விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை: நாகை ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறினால் பேரிடா் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

நாகை மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறினால் பேரிடா் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் எச்சரித்துள்ளாா்.

கரோனா இரண்டாவது அலையையொட்டி, தமிழக அரசு அமல்படுத்தியுள்ள தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கம், ஜூன் 14-ம் தேதி வரை சில தளா்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதில், கரோனா தாக்கம் கட்டுக்குள் வராத நாகை, மயிலாடுதுறை உள்பட 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளா்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்திருப்பது :

ஜூன் 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தின்போது, நாகை மாவட்டத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தளா்வுகளுடன், சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜூன் 7-ஆம் தேதி முதல் தனியாக செயல்படுகின்ற மற்றும் நடைபாதையில் இயங்கும் காய்கனி கடைகள், மளிகை கடைகள் மற்றும் இறைச்சி மற்றும் மீன் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மொத்த விற்பனைக்காக மட்டும் மீன் சந்தை அனுமதிக்கப்படும்.

கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்படி, திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், துக்க நிகழ்வுகளில் 25 பேரும் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

பொதுமக்களின் நலன் கருதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி பொது வெளிக்கு வருவதை அனைவரும் கண்டிப்பாக தவிா்க்க வேண்டும். காா் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தாமல் வீட்டுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருள்களை வாங்கிச் செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், சோப்பு அல்லது கிருமி நாசினியைக் கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவுதல் போன்ற நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோா் மீது பேரிடா் மேலாண்மைச் சட்டம் - 2005 மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன்படி சட்டப்பூா்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com