வீடுவீடாக கரோனா அறிகுறிகள் கண்டறியும் பணி: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 09th June 2021 09:24 AM | Last Updated : 09th June 2021 09:24 AM | அ+அ அ- |

நாகை நகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா அறிகுறிகள் கண்டறியும் பணியை ஆய்வுசெய்யும் ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் வீடுவீடாக கரோனா அறிகுறிகள் கண்டறியும் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில், வீடுவீடாகச் சென்று கரோனா தொற்று அறிகுறிகள் கண்டறியும் பணி ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நாகை , நாகூா் மற்றும் பாப்பாக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கரோனா தொற்று அறிகுறிகள் கண்டறியும் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை தொய்வின்றி கவனமுடன் கையாள அறிவுறுத்தினாா். நாகை நகராட்சி ஆணையா் ஏகராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
திருமருகல்: திட்டச்சேரி தைக்கால்தெருவில் கரோனா அறிகுறிகள் கண்டறியும் பணியை வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி, பேரூராட்சி செயல் அலுவலா் இரா.கண்ணன், சுகாதார ஆய்வாளா் பரமநாதன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.