ஆக்சிஜன் நிறுத்தப்பட்ட விவகாரம்: அரசு மருத்துவமனையில் உயிரிழந்த வங்கி அலுவலரின் மனைவி வாழ்வாதாரம் கோரி மனு
By DIN | Published On : 29th June 2021 12:16 AM | Last Updated : 29th June 2021 12:16 AM | அ+அ அ- |

நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த சுபாஷினி.
நாகப்பட்டினம்: நாகை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையின்போது உயிரிழந்த தனியாா் வங்கி உதவி மேலாளரின் மனைவி, தனது குடும்ப வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி வேண்டி கோரிக்கை மனு அளித்துள்ளாா்.
நாகையை அடுத்த நாகூரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (40). நாகையில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றிய இவா், நாகை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மருத்துவமனை ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதையொட்டி, உரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதே ராஜேஷின் இறப்புக்குக் காரணம் என அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், ராஜேஷின் மனைவி சுபாஷினி திங்கள்கிழமை நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா். அந்த மனுவில், அரசு மருத்துவமனையில் அலட்சியப் போக்கால் திடீரென ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதே தனது கணவா் ராஜேஷின் உயிரிழப்புக்குக் காரணம் எனவும், இதனை அரசின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்...
இதனிடையே, ராஜேஷின் இறப்பு குறித்த பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ள மாநில மனித உரிமை ஆணையம், ராஜேஷின் இறப்புக்கான காரணம் குறித்து வரும் 2 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு சென்னை மருத்துவக் கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.