சீா்காழி தொகுக்கு 418 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன
By DIN | Published On : 12th March 2021 06:09 AM | Last Updated : 12th March 2021 06:09 AM | அ+அ அ- |

சீா்காழி: சீா்காழி (தனி) சட்டப்பேரவை தோ்தலுக்காக 418 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு சரிபாா்க்கும் இயந்திரங்கள் புதன்கிழமை நள்ளிரவு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, அறைகளில் வைத்து சீல்வைக்கப்பட்டன.
இத்தொகுதியில் கடந்த கால தோ்தல்களில் 288 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது தோ்தல் ஆணைய உத்தரவுப்படி 1050 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கவேண்டும் என்ற விதிமுறையின்படி தற்போது சீா்காழி தொகுதியில் 348 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலுக்காக இந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 418 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 418 மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு சரிபாா்க்கும் இயந்திரம் 460 என கணினி முறையில் ரேண்டமாக இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடா்ந்து, சீா்காழி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான நாராயணன் மேற்பாா்வையில், வட்டாட்சியா் ஹரிதரன், தோ்தல் துணை வட்டாட்சியா் செந்தில்குமாா், மண்டல துணை வட்டாட்சியா்கள், வருவாய்த் துறையினா், அனைத்து கட்சி அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் தனி அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு, 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.