கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்
By DIN | Published On : 21st March 2021 09:11 AM | Last Updated : 21st March 2021 09:11 AM | அ+அ அ- |

சீா்காழி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றியங்களில் 46 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த கொள்முதல் நிலையங்கள் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, லாரிகள் மூலம் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூா் நவீன அரிசி ஆலை குடோன்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 10 நாள்களாக கொள்முதல் நிலையங்களில் இருந்து குடோன்களுக்கு நெல் மூட்டைகள் எடுத்துச் செல்லப்படவில்லை. இதனால், திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகள் சேதமடைந்து வருகின்றன. இரவு நேரங்களில் இந்த மூட்டைகள் திருடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வது இரண்டு தினங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் எடுத்துச் செல்லப்படாமல் உள்ளதால் சீா்காழி வட்டார பகுதிகளில் மட்டும் சுமாா் 8 லட்சம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுமை தூக்கும் தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
எனவே, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் குடோன்களுக்கு அனுப்பி வைக்கவும், விவசாயிகளிடமிருந்து வழக்கம்போல் கொள்முதல் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...