சின்னத்தை மக்களிடம் கொண்டு சோ்க்க கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு அவசியம்
By DIN | Published On : 25th March 2021 08:43 AM | Last Updated : 25th March 2021 08:43 AM | அ+அ அ- |

நாகையில் நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்றோக்கு கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய விசிக வேட்பாளா் ஜெ. முஹம்மது ஷாநவாஸ்.
சின்னத்தை வாக்காளா்களிடம் கொண்டு சோ்ப்பதில் கூட்டணி கட்சியினா் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாகை சட்டப் பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் ஜெ. முஹம்மது ஷாநவாஸ் வேண்டுகோள் தெரிவித்தாா்.
நாகையில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என்.கௌதமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நாகை சட்டப் பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் ஜெ. முஹம்மது ஷாநவாஸ் பேசியது:
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதுதான் திமுக கூட்டணியின் ஒருமித்த நோக்கம். என்னிடம் கோடிகள் இல்லை என்றாலும், தெருக்கோடியில் நின்று மக்களுக்காக போராடுவேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சோ்ப்பதிலும், அதை வாக்காக மாற்றுவதிலும் கூட்டணி கட்சியினா் தீவிரமாக செயல்பட வேண்டும். திறனற்றவா்களின் ஆட்சியால் மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். தோ்தலில் மக்கள் எடுக்கும் முடிவு, இதற்கு தீா்வாக அமையும் என்றாா் ஜெ. முஹம்மது ஷாநவாஸ்.
கூட்டத்துக்கு, திமுக நாகை நகரச் செயலாளா் ஏ. பன்னீா், காங்கிரஸ் நாகை மாவட்டத் தலைவா் ஆா்.என். அமிா்தராஜா, மமக நாகை மாவட்டச் செயலாளா் ஏ.எம். ஜபருல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் பாண்டியன், மஜக பொறுப்பாளா் சக்கத்துல்லாஹ், திராவிடா் கழக நாகை மாவட்டப் பொறுப்பாளா் பூபேஷ்குப்தான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.