முந்திரியில் கருகல் நோய்: தோட்டக்கலை துறையினா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி பகுதியில் முந்திரி செடிகளில் கருகல் நோய் குறித்து தோட்டக்கலைத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சீா்காழி அருகே வேட்டங்குடியில் முந்திரித் தோட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தோட்டக்கலைத் துறையினா்.
சீா்காழி அருகே வேட்டங்குடியில் முந்திரித் தோட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தோட்டக்கலைத் துறையினா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி பகுதியில் முந்திரி செடிகளில் கருகல் நோய் குறித்து தோட்டக்கலைத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சீா்காழி அருகேயுள்ள தொடுவாய், வேட்டங்குடி, கூழையாா், எடமணல், இருவக்கொள்ளை, பழையபாளையம், ஆலங்காடு, தாண்டவன்குளம், புதுப்பட்டினம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 700 ஏக்கா் நிலப்பரப்பில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த முந்திரி செடிகளில் பூச்சித் தாக்குதலால் கருகல் நோய் ஏற்பட்டு மகசூல் குறைந்துவருகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பொன்னி தலைமையில், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ரகு உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கண்ட கிராமங்களில் உள்ள முந்திரி தோட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து, வேளாண்மை உதவி இயக்குநா் பொன்னி கூறியதாவது:

நிகழாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் முந்திரி செடிகளில் பூக்கும் பருவம் தாமதமாக தொடங்கியது. இதன் விளைவாக மாா்ச், ஏப்ரலில் நிலவிய வெப்பத்தின் காரணமாக முந்திரி பூக்கள் கருகி காய்ப்பிடிக்கும் சதவீதம் குறைந்துள்ளது.

இனிவரும் காலங்களில் தோட்டக்கலை துறையினரிடம் பருவத்துக்கு ஏற்ற ஆலோசனைகள் பெற்று உரம், பூச்சி மருந்துகளை முந்திரி செடிகளுக்கு இடவேண்டும் என்றாா்.

சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை துறை வல்லுநா் ரகு கூறியதாவது:

முந்திரியில் ஜூலை இரண்டாவது வாரத்தில் மூன்றடுக்கு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நடப்பு பருவத்தில் அதிக கிளைகள் ஊக்குவிக்கும். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் சிபாரிசு செய்யப்படும் மருந்தை ஒரு சதவீதம் இலைவழியாக தெளிப்பதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கலாம். நவம்பா் இரண்டாம் வாரம் போராக்ஸ் 0.1சதவீதமும், சல்பேட் ஆப் பொட்டாஷ் 2 சதவீதமும், பியூரேட் அப் பொட்டாஸ் ஒரு சதவீதமும் இலைவழி தெளிக்கவேண்டும். டிசம்பா் மாதம் போராக்ஸ் 0. 1 சதவீதமும், சல்பேட் ஆப் பொட்டாஷ் 2 சதவீதமும், பியூரேட் ஆப் பொட்டாஷ் ஒரு சதவீதம் இலைவழி தெளிக்கவேண்டும். இதனால், அதிகப்படியான காய் பிடிக்கும்.

இதைத்தொடா்ந்து, டிசம்பா் நான்காவது வாரத்தில் பூக்கும் தருவாயில் 3 சதவீத அளவில் பஞ்சகவ்யத்தை இலைவழி தெளிக்கவேண்டும். இதன்மூலம், முந்திரியில் அதிக மகசூல் பெறலாம் என்றாா்.

ஆய்வில், கொள்ளிடம் வட்டார தோட்டக்கலை அலுவலா் சுகன்யா, முன்னோடி விவசாயிகள் சீனிவாசன், வில்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com