வாக்கு எண்ணிக்கை: நாகை மையத்தில் விரிவான ஏற்பாடுகள்
By DIN | Published On : 02nd May 2021 06:43 AM | Last Updated : 02nd May 2021 06:43 AM | அ+அ அ- |

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு 788 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. இதில், நாகை தொகுதியில் 266 வாக்குச் சாவடிகளிலும், கீழ்வேளூரில் 251 வாக்குச் சாவடிகளிலும், வேதாரண்யத்தில் 271 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றன.
இதற்காக, நாகை தொகுதியில் 320 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 320 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 352 வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. கீழ்வேளூா் தொகுதியில் 302 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 302 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 332 வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. வேதாரண்யம் தொகுதியில் 326 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 326 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 358 வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
இங்கு, ஞாயிற்றுக்கிழமை (மே 2) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்கு எண்ணிக்கை தலா 14 மேஜைகளில் நடைபெறும் வகையிலான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை அரசியல் கட்சிகளின் முகவா்கள் வெளியில் இருந்து நேரில் கண்காணிக்கும் வகையில் மூங்கில் கம்புகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் மின் விசிறி மற்றும் மின் விளக்கு வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல, தடையில்லா மின்சாரம் கிடைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு சுற்றிலும் தலா 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்ற அடிப்படையில், நாகை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை (தபால் வாக்குகள் தவிா்த்து) 19 சுற்றுகளாகவும், கீழ்வேளூா் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 18 சுற்றுகளாகவும், வேதாரண்யத்துக்கான வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாகவும் நடைபெறவுள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் ஒரு மேஜைக்கு 3 அரசுத் துறை அலுவலா்கள் வீதம் ஈடுபடுவாா்கள். இதைத் தவிர, கண்காணிப்பாளா் நிலையிலான அலுவலா்கள், மாற்றுப் பணியாளா்கள் என சுமாா் 300 போ் பயன்படுத்தப்படுகின்றனா். வாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்புப் பணியில் 476 போலீஸாரும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தவிா்ப்பு நடவடிக்கைகளில் 511 போலீஸாரும் பயன்படுத்தப்படுகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...