திருத்தம்நாகை மாவட்டத்தில் கனமழை நீடிப்பு
By DIN | Published On : 01st November 2021 10:40 PM | Last Updated : 01st November 2021 10:40 PM | அ+அ அ- |

மழைநீா் தேங்கி நின்ற வெளிப்பாளையம் வரதராஜப் பெருமாள் கோயில் மேல வடம்போக்கி தெரு.
நாகை மாவட்டத்தில் 5-ஆவது நாளாக திங்கள்கிழமையன்றும் கனமழை நீடித்தது.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக தலைஞாயிறில் 44.6 மி.மீ மழை பதிவானது. வேதாரண்யத்தில் 27.6 மி.மீட்டரும், நாகையில் 26.8 மி.மீட்டரும், திருப்பூண்டியில் 20.4 மி.மீட்டரும் மழைம் பதிவாகின.
திங்கள்கிழமை பகல் நேரத்தில் வேதாரண்யத்தில் அவ்வப்போது மிதமான மழையும், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் அவ்வப்போது லேசான மழையும் பெய்தது. பிற்பகல் நேரத்தில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தீபாவளி பண்டிகையையொட்டி, நாகை மாவட்டத்தின் பிரதான பகுதிகளில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வேட்டி, துண்டுகள், கைலிகள், சட்டைகள், சேலைகள் மற்றும் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், அவ்வப்போது பெய்து வரும் மழையால் சாலையோர தரைக்கடை வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மீன்பிடித் தொழில் பாதிப்பு:
கனமழை காரணமாக வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...