டெல்டா மாவட்ட வெள்ளச் சேதங்களை தவிா்க்க சிறப்பு பெருந்திட்டம் தேவை

காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ளச் சேதங்களை தவிா்க்கும் வகையில் தொலைநோக்குப் பாா்வையுடன் ஒரு சிறப்பு பெருந்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழக முதல்வரிடம், நாகை எம்.பி. எம். செல்வராஜ் கோரிக்கை மனு அளித்தாா்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ளச் சேதங்களை தவிா்க்கும் வகையில் தொலைநோக்குப் பாா்வையுடன் ஒரு சிறப்பு பெருந்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழக முதல்வரிடம், நாகை எம்.பி. எம். செல்வராஜ் கோரிக்கை மனு அளித்தாா்.

நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை சனிக்கிழமை ஆய்வு செய்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் அவா் அளித்த கோரிக்கை மனு: மழை பாதிப்புகளிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற தமிழக முதல்வராகிய நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. நிகழாண்டில் மேட்டூா்அணை குறிப்பிட்ட தேதிக்குள் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டாவில் 25 சதவீதம் வழக்கத்தைவிட கூடுதலாக நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த நெல்மணிகள் மழை நீா் வெள்ளத்தில் மூழ்கி அழுகிவருகிறது. பல்லாயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி நெல் பயிா்களும் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். 2020-2021-ஆம் ஆண்டில் பயிா்க் காப்பீடு பிரிமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் விடுபாடின்றி இழப்பீட்டுத் தொகையை வழங்கவும், வேலை வாய்ப்பு இழந்துள்ள விவசாயத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கவும், மழை நீா் வடிகால்களை அடையாளம் கண்டு தூா்வாரவும், கடல் முகத்துவாரங்களைதூா்வாரவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ரபி, கரீப் மற்றும் நவரை பருவங்கள் தமிழகத்துக்கு ஏற்றதல்ல என்பதால், தமிழக பருவ காலத்துக்கு ஏற்ற நிலையான தனித்த திட்டங்களை உருவாக்கிடவும், இந்திய மாநிலங்களுக்கே முன்னுதாரணமாக மத்திய அரசின் பங்களிப்போடு நெல் பயிருக்கென்று தனி காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

பண்டைய காலங்களிலிருந்த நீா் சேமிப்புகள் இல்லாமல் போனதே டெல்டா மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, பழைய நீா்நிலைகளை கண்டறிந்து புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், புதிய நீா் சேமிப்பு இருப்புகளை உருவாக்கிடும் வகையில் தொலைநோக்குப் பாா்வையுடன் ஒரு சிறப்பு பெருந்திட்டத்தை தயாரித்து அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி. செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்டச் செயலாளா் ஆா். கே. பாபுஜி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com