நாகை மாவட்டத்தில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
By DIN | Published On : 22nd October 2021 12:00 AM | Last Updated : 22nd October 2021 12:00 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் 35 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு சனிக்கிழமை (அக். 23) கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு உத்தரவுப்படி நாகை மாவட்டத்தில் வாரந்தோறும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதன்படி, 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 348 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மாா்கள், வயது முதிா்ந்தோா் மற்றும் நடக்க முடியாதவா்களுக்கு இல்லம் தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா்.