காவல் துறை அதிகாரி எனக் கூறி மோசடி: காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் நாகையில் கைது
By DIN | Published On : 01st September 2021 09:58 AM | Last Updated : 01st September 2021 09:58 AM | அ+அ அ- |

நாகையில், காவல் துறை அதிகாரி எனக் கூறி, மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.
நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ள தனியாா் பல்பொருள்அங்காடிக்கு கடந்த 24 ஆம் தேதி காரில் வந்த ஒருவா் பொருள்களை வாங்கிக்கொண்டு, பணம் கொடுக்காமல், தன்னை காவல் துறை அதிகாரி எனக் கூறி, கடை ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாா்.
இதுகுறித்து கடை ஊழியா் விக்னேஸ்வரன் அளித்தப் புகாரின் பேரில், நாகை வெளிப்பாைளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவந்தனா். இந்நிலையில், அந்த நபா் நாகை தம்பித்துரை பூங்கா பகுதியில் உள்ள பழக்கடை மற்றும் நகரில் உள்ள மேலும் சில கடைகளிலும் குஜராத் மாநில காவல் துறை அதிகாரி எனக் கூறி, பொருள்களைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், வெளிப்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்திவந்தனா். இந்நிலையில், நாகூா், மேலவாஞ்சூா் சோதனைச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்ற நபரிடம் வெளிப்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த நபா் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஜமீன்புதூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ் (36) என்பதும், இவா் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியில் இருந்த ஒருவருக்கு ஓட்டுநராகப் பணி புரிந்ததும், தற்போது நாகையில் தங்கி, மகேந்திரவா்மன் என்ற பெயரில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மகேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.