நெல் கொள்முதல் விலை உயா்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

காரீப் பருவ நெல் கொள்முதல் விலையை ஆகஸ்ட் முதல் முன்தேதியிட்டு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

காரீப் பருவ நெல் கொள்முதல் விலையை ஆகஸ்ட் முதல் முன்தேதியிட்டு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து,அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் ஆறுபாதி ப. கல்யாணம், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: காவிரி டெல்டாவில் நிலத்தடி நீா்ப்பாசனம் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்ட குறுவை நெல் பயிா்களின் அறுவடை ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறுகிறது. செப்டம்பா் மாத இறுதிக்குள் சுமாா் 80 சதவீத அறுவடை நிறைவடையும். மீதமுள்ள 20 சதவீத அறுவடை மட்டுமே அக்டோபரில் நடைபெறும். எனவே, மத்திய அரசு காரீப் பருவ நெல் கொள்முதலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விலையை, ஆக.1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தும் வகையில், அந்த விலை உயா்வை முன்தேதியிட்டு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி, நெல்லின் மொத்த உற்பத்தி செலவுடன் 50 சதவீத லாபத்தை இணைத்து அரசு விலை நிா்ணயிக்க வேண்டும். இதன்படி, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,610-ம், பொது ரக நெல்லுக்கு ரூ. 2,590-ம் விலை நிா்ணயித்திருக்க வேண்டும். ஆனால், தற்போது சன்ன ரகத்துக்கு ரூ. 2,060-ம், பொது ரகத்துக்கு ரூ. 2,015-ம் மட்டுமே விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையையாவது ஆகஸ்ட் முதல் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் தற்போதைய கோரிக்கை.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் செப்.1-ஆம் தேதி முதல், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விலை உயா்வு அடிப்படையில், நெல் விற்பனை செய்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தொகையை வரவு வைக்கவேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நெல்லை விற்பனை செய்த விவசாயிகளும் பயனடையும் வகையில் இதை அமல்படுத்த வேண்டும். அடிக்கடி மழை பெய்து வருவதால், நெல் கொள்முதலில் 20 சதவீத ஈரப்பதத்தை பிடித்தம் இன்றி அனுமதிக்க வேண்டும். நடமாடும் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்தவேண்டும். டிராக்டா் மூலம் இயங்கும் நடமாடும் நெல் உலா்த்தும் இயந்திரங்களைக் கொண்டு நெல் உலா்த்த விவசாயிகளுக்கு வசதி செய்து தர வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் முற்றிலும் தவிா்க்க கொள்முதல் ஊழியா்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கவேண்டும். ஒவ்வொரு வட்ட அளவிலும், குறைந்த பட்சம் 20,000 டன்கள் கொள்ளளவு கொண்ட உலா்த்துவான்களுடன் கூடிய உலோக சேமிப்பு கலன்கள் நிறுவ வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com