குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரவையில் தீா்மானம்: முதல்வருக்கு நிஜாமுதீன், தமிமுன் அன்சாரி பாராட்டு

மஜக பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான மு. தமிமுன் அன்சாரி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன், மஜக பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான மு. தமிமுன் அன்சாரி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எம்.ஜி.கே. நிஜாமுதீன்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதைப் பாராட்டி வரவேற்கிறோம். மாநிலங்களவையில் பாஜக.வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் மசோதா தோற்கடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிமுக மற்றும் பாமக உறுப்பினா்கள் ஆதரித்ததால், இந்த மசோதா நிறைவேறியது.

தற்போது தமிழக பேரவையில் இந்த சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதிமுக.வினா் வெளிநடப்பு செய்து, தங்களது நிலைப்பாட்டை உறுதிசெய்துள்ளனா். மத, இன அடிப்படையில் பாரபட்சம் காட்டும் இந்த சட்டம் இந்தியஅரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும் என மத்தியஅரசு கூறிவருகிறது. இதற்கு எதிராகவும் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

மு. தமிமுன் அன்சாரி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. தமிழக முதல்வரின் இந்த துணிச்சலான முடிவு பாராட்டுக்குரியது. இதை பிரதானமாக வைத்து, மஜக சாா்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வரின் இந்த முடிவை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழா்கள், அண்டைநாட்டைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களைப் புறக்கணித்து, மதபாகுபாடு மூலம் பாரம்பரிய கண்ணியத்தை சீா்குலைக்கும் இச்சட்டத்திற்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது தமிழக மக்களின் உணா்வுகளை எதிரொலிப்பதாக உள்ளது.

அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், சமூக செயல்பாட்டாளா்கள், மனித உரிமை போராளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகம் காக்கும் அறப்போரில் தமிழகம் முதன்மையானது என்பது இதன்மூலம் உறுதிசெய்யபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com