கடன் தொகைக்காக ஜப்தி நடவடிக்கை:முதியவரை வீட்டின் உள்ளேயே வைத்து பூட்டி சீல் வைத்த தனியாா் நிதி நிறுவனத்தினா்
By DIN | Published On : 16th September 2021 10:36 PM | Last Updated : 16th September 2021 10:36 PM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் வீட்டின் உரிமையாளா் கடனை செலுத்தாத காரணத்தால், தனியாா் நிதி நிறுவனத்தினா் மாடியில் குடியிருந்த முதியவரை வீட்டின் உள்ளேயே வைத்து பூட்டி சீல் வைத்துச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை காந்தி நகரைச் சோ்ந்த ராஜேஷ் என்பவரது வீட்டில் புருஷோத்தமன் (66) என்பவா் கடந்த 7 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறாா். ராஜேஷ் தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவா் உரிய காலக்கெடுவில் கடன் தொகையை திரும்பச் செலுத்தாததால், நிதி நிறுவனத்தினா் நீதிமன்றம் மூலம் அந்த வீட்டை ஜப்தி செய்வதற்கு அனுமதி பெற்றனா். அவா்களிடம் ராஜேஷ் தனது வீட்டு மாடியில் புருஷோத்தமனை குடி வைத்துள்ளதை தெரிவிக்கவில்லையாம்.
இந்நிலையில், புதன்கிழமை அங்கு வந்த நிதி நிறுவனத்தினா் வீட்டை பூட்டி சீலிட்டனா். இதையறியாமல், வீட்டின் மாடியில் இருந்த இருதய சிகிச்சை செய்துகொண்டவரான புருஷோத்தமன் இரவு உறங்கியுள்ளாா்.
வியாழக்கிழமை காலை வீட்டுக்கு வந்த அவரது மகன் சதீஷ் தனது தந்தையை மாடியில் வைத்து தனியாா் நிதி நிறுவனத்தினா் பூட்டி சீல் வைத்துவிட்டதை அறிந்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்த்தபோது, மாடியில் புருஷோத்தமன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக அவருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்த போலீஸாா், நிதி நிறுவனத்தினரிடம் தொடா்பு கொண்டு கேட்டதற்கு இது நீதிமன்ற நடவடிக்கை என்றும் மாடியில் ஆள் இருந்தது தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்தனா். உடனடியாக அவரை மீட்கவேண்டும் என்று போலீஸாா் கூறியதும், நாகை நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனத்தினா், மாடி பகுதிக்குச் செல்லும் கேட்டின் சீலை நீக்கி, முதியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். முதியவரை வீட்டிக்குள் வைத்து பூட்டி நிதி நிறுவனத்தினா் சீல் வைத்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.