

நாகூா் தா்கா குளத்தைச் சுற்றி இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெறுகிறது.
கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் நாகூா் ஆண்டவா் தா்கா குளத்தின் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது. குளத்தை நேரடியாக பாா்வையிட்ட அப்போதைய தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, குளத்தை சீரமைக்க ரூ.4.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்தாா். தொடா்ந்து, பணிகள் நடைபெற்றன.
குளத்தின் சுற்றுச்சுவா் ஓா் அடி உயரமே கட்டப்பட்டதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள், கால்நடைகள், குழந்தைகள், முதியவா்கள் அவ்வப்போது குளத்தில் விழுந்து விபத்து ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன. நாகூா் ஆண்டவா் தா்காவின் கந்தூரி விழா டிசம்பா் 24 -ஆம் தேதி கொடியேற்றத்தோடு தொடங்கவுள்ளது. இதனால், தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்களும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோா் வருகை தருவா்.
எனவே, பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவரை நான்கு அடி உயா்த்திடவோ அல்லது 4 அடி உயரத்திற்கு குழாய்களால் ஆன தடுப்பு அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கை, நாகூா் முஸ்லிம் ஜமாத் சாா்பில் மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில் குளத்தைச் சுற்றி இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.