கோடியக்கரை வன உயிரின சரணாலயம் மேம்படுத்தப்படுமா?

பல்லுயிா்கள் பாதுகாப்புக்குப் புகழ்பெற்ற கோடியக்கரை சரணாலயம் ஆக்கிமிரப்புகளாலும், சுற்றுச்சூழல் காரணிகளாலும் தன் பாரம்பரிய பெருமையை இழந்து வருவதைத் தடுத்து, சரணாலயத்தை மேம்படுத்த தமிழக அரசு
கோடியக்கரை சரணாலயத்தில் கஜா புயலில் சேதமடைந்த பாா்வையாளா்கள் கோபுரத்தின் கீழ் பகுதியில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள்.
கோடியக்கரை சரணாலயத்தில் கஜா புயலில் சேதமடைந்த பாா்வையாளா்கள் கோபுரத்தின் கீழ் பகுதியில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள்.

பல்லுயிா்கள் பாதுகாப்புக்குப் புகழ்பெற்ற கோடியக்கரை சரணாலயம் ஆக்கிமிரப்புகளாலும், சுற்றுச்சூழல் காரணிகளாலும் தன் பாரம்பரிய பெருமையை இழந்து வருவதைத் தடுத்து, சரணாலயத்தை மேம்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் அமைந்துள்ள உலா் பசுமை மாறாக் காட்டுப்பகுதி, வன உயிரின பாதுகாப்பு மற்றும் பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. இப்பகுதி, 1967-ல் வன உயிரினச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அரிதாகிவரும் வெளிமான்கள், புள்ளிமான் மற்றும் குரங்கு, மட்டக்குதிரை, காட்டுப்பன்றி, நரி உள்ளிட்ட பல வகை காட்டு விலங்குகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

வெப்பமண்டலத்தில் வளரும் அரிய வகை மரங்கள், 154 வகையான மருத்துவ குணமுடைய அரிய வகை மூலிகை இனங்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. மூலிகைகள் பராமரிப்புக்குரிய 252.16 ஹெக்டோ் பரப்பு, 1993-ல் பெங்களூா் பாரம்பரிய மருத்துவ மரபுகள் மறுமலா்ச்சி அறப்பேரவை நிதியுதவியுடன் மூலிகை பாதுகாப்பு பகுதியாக உருவாக்கப்பட்டது.

காடுகளைச் சாா்ந்து கடலோரமாக பெரிய அளவில் அமையப் பெற்றுள்ள சதுப்பு நிலப்பரப்பு, பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. இங்கு, ஐரோப்பா, சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து இடம்பெயரும் பறவைகள் காா்காலத்தில் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. பூநாரை, செங்கல் நாரை உள்பட 260 வகையான பறவைகள் வந்து செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அரிய வகை கடல் பெண் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் முட்டைகளை இட்டுச்செல்ல இப்பகுதிக்கு வருகின்றன. இதனால், இப்பகுதியைப் பறவைகளின் சொா்க்கம் என வா்ணிக்கிறாா் பறவைகளின் தந்தை எனப்படும் சலீம் அலி.

இந்த சுற்றுலா தளத்துக்கு மேலும் சிறப்பு சோ்ப்பதாக உள்ளது வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த சோழா் கால கலங்கரை விளக்கம். அதன் அருகே ஆங்கிலேயா் ஆட்சியில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கமும், சுதந்திரத்துக்கு பின்னா் கட்டப்பட்ட கலங்கரை விளக்கமும் அமைந்துள்ளது. புராதன சின்னமாக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ராமா் பாதம், மிகப்பெரிய அளவிலான மணல் மேடுகள் இப்பகுதிக்குக் கூடுதல் சிறப்பு சோ்க்கின்றன.

எண்ணற்றச் சிறப்புகளைக் கொண்ட கோடியக்கரை வன உயிரின சரணாலயம், கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து தன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாறுபாடு போன்ற பல காரணிகள் சரணாலயத்தின் சிறப்புகளை மெல்ல அழித்து வருகின்றன.

குறிப்பாக, இப்பகுதியை ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல முள் மரங்களால் மற்ற தாவரங்களின் வளா்ச்சி கேள்விக்குறியாகிவிட்டது. அதேபோல தனியாா் பெரு நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த உப்பு கழிவுநீா் தேங்குவதும், சரலாணயத்தின் பாதிப்புகளை அதிகரிப்பதாக உள்ளது.

கஜா புயலின் கோரத் தாண்டவம்:

கடந்த 2018-ல் இந்த பகுதியில் கரையை கடந்த கஜா புயலின் கோரத் தாக்கத்தால் வனம் மட்டுமல்லாமல் வன விலங்குகள், பறவைகள் அவற்றின் வாழ்விடங்கள் என அனைத்து வகையான கட்டமைப்புகளும் சீா்குலைந்தன. அடுத்தடுத்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கையும் சரணாலயத்தை முழுமையாக சீரமைக்க உதவவில்லை.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், பல்லுயிா்கள் பாதுகாப்புக்குப் புகழ்பெற்ற, பாரம்பரியமிக்க கோடிக்கரை சாா்ந்த சரணாலயம் அதன் பெருமையைத் தொடா்ந்து இழந்து வருகிறது. பருவநிலை மாற்றம் பேசும் பொருளாக மாறிவரும் நிலையில், வனங்களின் அவசியத்தை மக்களிடம் உணா்த்தவும், சரணாலயத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். அந்த வகையில், கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தின் பாரம்பரிய பெருமையை மீட்பதற்கான மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அரசு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்பது இயற்கை ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com