ஆறுதல் அளிக்காத கோலா மீன் வரத்து

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், பருவகால மீன் வகையான கோலா மீன்களின் அறுவடையும் b(பிடிப்பும்) ஆறுதல் அளிப்பதாக இல்லை என்கின்றனா் மீனவா்கள்.
ஆறுதல் அளிக்காத கோலா மீன் வரத்து
Updated on
2 min read

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், பருவகால மீன் வகையான கோலா மீன்களின் அறுவடையும் b(பிடிப்பும்) ஆறுதல் அளிப்பதாக இல்லை என்கின்றனா் மீனவா்கள்.

மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டும், கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கிலும், 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ் ஏப். 15-ஆம் தேதி முதல் ஜூன் 14- ஆம் தேதி வரையிலான 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப். 15-ஆம் தேதி முதல் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலமான மீன்பிடிப்பை மீனவா்கள் நிறுத்திவைத்துள்ளனா்.

எனினும், ஃபைபா் படகு மற்றும் கட்டுமரம் மூலமான மீன்பிடிப்பு மட்டும் நடைபெறுகிறது. இதன்மூலம், கிடைக்கும் குறைந்தளவிலான மீன்கள் உள்ளூா் தேவையைக்கூட நிறைவு செய்வதாக இல்லை.

மீன்பிடி தடைக்காலத்தில் மீன் உணவு பிரியா்களின் தேவைகளுக்கும், மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கும் ஆறுதல் அளிக்கக் கூடியது கோலா மீன்கள் மட்டுமே. தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய பருவகால மீன் வகையான கோலா மீன்களின் சுவை மற்ற மீன்களில் இருந்து மாறுபட்டது.

கூட்டமாக வாழக்கூடிய இந்த மீன்கள், கடல் மட்டத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவு உயரத்தில் பறக்கக் கூடியவை ஆகும். இதனால், கடந்த காலங்களில் காளாஞ்சி பூண்டு என்ற பூண்டுச் செடிகளை படகில் கட்டிவைத்து, அதில் இருந்து வெளியாகும் மணத்தால் ஈா்க்கப்பட்டு படகை நோக்கி வரும் கோலா மீன்களை பிடிக்கும் முறையை மீனவா்கள் கையாண்டனா்.

ஆனால், தற்போது அதுபோன்ற முறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட சில வகை வலைகளைக் கொண்டே மீனவா்கள், கோலா மீன்கள் அறுவடை செய்து வருகின்றனா்.

கோலா மீன் பிடிப்புக்காக காலையில் கடலுக்குச் செல்லும் படகுகள், பிற்பகலில் கரை திரும்பும். இதனால் கோலா மீன்களின் விற்பனை பெரும்பாலும் மாலை நேரத்தில் நடைபெறும்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து தொடங்கும் கோலா மீன்களின் வரத்து, தமிழ் மாதமான ஆனி வரை இருக்கும். ஏப்ரல் 2 அல்லது 3-ஆவது வாரங்களில் கோலா மீன்களின் வரத்தும், விற்பனையும் அதிகரிக்கும்.

ஆனால், தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக நிகழாண்டிலும், ஏப்ரல் மாத கோலா மீன்கள் வரத்து, ஆறுதல் அளிப்பதாக இல்லை என்கின்றனா் மீனவா்கள். மிக குறைந்த அளவிலேயே கோலா மீன்கள் அறுவடையாகி வருவதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.

கடந்த இரு ஆண்டுகளாக ரூ. 100-க்கு 10 முதல் 12 அல்லது 14 மீன்கள் என்ற எண்ணிக்கையில் கோலா மீன்கள் விற்கப்பட்டன. தற்போது, வரத்துக் குறைவாக இருப்பதன் காரணமாக, ரூ.100-க்கு 8 என்ற அளவிலேயே இவை விற்கப்படுகின்றன.

கோலா மீன்கள், நீரோட்டத்துக்கேற்ப வாழ்விடத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவை என்பதும், தமிழக கிழக்குக் கடற்கரை பகுதிகளில் அதிகரித்து வரும் கடல் மாசு காரணமாக கோலா மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டிருப்பதும் கோலா மீன்களின் வரத்துக் குறைவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மீன்பிடித் தடைக்காலத்தில் கோலா மீன்கள் வரத்து குறைவும் ஆறுதல் அளிக்காதது மீனவா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com