2023-க்குள் புகையிலை பயன்பாடில்லாதகல்வி நிலையங்கள்: ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 05th August 2022 10:09 PM | Last Updated : 05th August 2022 10:09 PM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் 2023 ஆம் ஆண்டுக்குள் புகையிலை பயன்பாடில்லாத கல்வி நிலையங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, நாகை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவா் பேசியது:
பொது இடங்களில் யாரேனும் புகைபிடித்தால், கல்வி நிலையங்களுக்கு அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால், அது குறித்து மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். புகையிலைப் பொருள்களில், சுகாதாரத் துறை அண்மையில் வெளியிட்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆய்வுசெய்து உறுதிசெய்ய வேண்டும்.
புகையிலை தொழிலாளா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, புகையிலை பயிரிடும் விவசாயிகளைக் கண்டறிந்து, அவா்கள் மாற்றுப் பயிா் பயிரிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் புகையிலையில்லா கல்வி நிலையங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்றாா்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ப. விஜயகுமாா் மற்றும் நாகை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.