வேளாண்மை விரிவாக்க மையக் கட்டட கட்டுமானப் பணி தொடக்கம்
By DIN | Published On : 05th August 2022 03:06 AM | Last Updated : 05th August 2022 03:06 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், கீழ்வேளூரில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். அப்போது, கீழ்வேளூா் மற்றும் திருக்குவளையில் ரூ. 5.6 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்டப்படும் என அவா் தெரிவித்தாா்.
முன்னதாக, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தை ஆட்சியா் திறந்து வைத்தாா். தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் இணை இயக்குநா் ஜாக்குலா அக்கண்டராவ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வெங்கடேசன், வேளாங்கண்ணி பேரூராட்சித் துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.