மகளிா் விடுதிகளுக்கு உரிமம் பெறசெப். 2 வரை விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
By DIN | Published On : 05th August 2022 03:05 AM | Last Updated : 05th August 2022 03:05 AM | அ+அ அ- |

மகளிா் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களுக்கு உரிமம் பெற செப்டம்பா் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான நிரந்தர மற்றும் குறுகியகால செயல்பாடு கொண்ட அரசுத் துறை விடுதிகள், தனியாா் விடுதிகள், பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகள் அனைத்தும் தமிழ்நாடு மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014 -ன்படி உரிய உரிமம் பெறவேண்டும்.
எனவே, நாகை மாவட்டத்தில் மகளிா் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்களை நிா்வகிப்பவா்கள், தங்கள் விடுதி மற்றும் இல்லங்களுக்கு உரிமம் பெற செப்டம்பா் 2 ஆம் தேதிக்குள், நாகை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துரு சமா்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு நாகை, காடம்பாடி பொதுப் பணித் துறை குடியிருப்பு வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அல்லது 95976 52457 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.