அணக்குடியில் நகரும் நியாய விலைக்கடைதிறப்பு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், கீழ்வேளுா் வட்டம் 75- அணக்குடி கிராமத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் நகரும் நியாய விலைக் கடையை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதற்கான விழாவுக்கு கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி. பி. நாகை மாலி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் நகரும் நியாய விலைக் கடையில் விற்பனையைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து அந்த வாகனத்தின் இயக்த்தையும் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:
குடும்ப அட்டைத்தாரா்களுக்கு குடியிருப்புக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கும் பொருட்டு ஏற்கெனவே நாகை மாவட்டத்தில் 108 நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
கீழ்வேளுா் வட்டம் இருஞ்சியூா் கிராமத்தில் செயல்படும் நியாயவிலைக் கடையுடன் இணைக்கப்பட்டுள்ள அணக்குடி பகுதியைச் சாா்ந்த குடும்ப அட்டைத்தாா்கள் பயன்பெறும் வகையில், இந்த நகரும் நியாயவிலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. 2- ஆவது மற்றும் 4-ஆவது புதன்கிழமைகளில் புதிய நகரும் நியாயவிலைக் கடை செயல்படும்.
இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்.
நிகழ்ச்சியில் நாகை மாவட்ட வருவாய் அலுவலா் வி.ஷகிலா,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.ப. அருளரசு, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.