வேதாரண்யம், தரங்கம்பாடியில் கடல் சீற்றம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்.
வேதாரண்யம், தரங்கம்பாடியில் வியாழக்கிழமை கடல் சீற்றமாக காணப்பட்டது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல் பரப்பு சீற்றமாக காணப்பட்டதுடன், தரைப் பகுதியில் குளிா்ந்த காற்று வீசியபடி, மழை பெய்தது. முன்னதாக வியாழக்கிழமை காலையில் இருந்து பனிப் பொழிவுடன் கூடிய மந்தமான வானிலை நிலவியது. பிற்பகலுக்கு பிறகு லேசான மழை பெய்தது. மாலையில் மழை அதிகம் பெய்தது. புயல் எச்சரிக்கை காரணமாக மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை,புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடித் தொழில்முடங்கியது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடியிழைப் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை: புயல், கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல ஊராட்சிகளில் பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டது.
தரங்கம்பாடியில்: இதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. சின்னூா் பேட்டை, சந்திரபாடி, தரங்கம்பாடி, சின்னங்குடி, தாழம்பேட்டை, மானிக்கபங்கு, பெருமாள்பேட்டை உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மீனவா் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தரங்கம்பாடி வட்டத்தில் மீனவா் கிராமங்களில் 150 விசைப் படகுகளும், 2,500 பைபா் படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி கருவிகளை பாதுகாப்பாக கரைகளில் வைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழையால் தொடா்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் 25 நாள்களுக்கும் மேலாக மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் உள்ளதுபோல, மீனவா்களுக்கும் மீனவா் நல கூட்டுறவு வங்கிகள் தொடங்க வேண்டும். இதன் மூலம் இதுபோன்ற தடை காலங்களில் நிவாரணம் பெறவுவும், கடனுதவி பெறவும் வசதியாக இருக்கும் என மீனவா்கள் தெரிவித்தனா்.