

நாகை துறைமுகத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு பின்னா் விசைப்படகு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனா்.
மாண்டஸ் புயல் காரணமாக நாகை மாவட்ட மீனவா்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதனால், மாவட்டத்திலுள்ள 26 மீனவ கிராமங்களைச் சோ்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள், தங்களது 3 ஆயிரம் நாட்டுப் படகுகள், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை பாதுகாப்பாக துறைமுகத்திலும், கரையோரங்களிலும் நிறுத்தியிருந்தனா்.
இந்நிலையில், மாண்டஸ் புயல் சனிக்கிழமை அதிகாலை சென்னை அருகே கரையை கடந்தது. இதனால், மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நாகை மாவட்ட மீனவா்கள் ஒரு வாரத்திற்கு பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விசைப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா்.
நாகை துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, நாகூா் பட்டினச்சேரி, நம்பியாா் நகா் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனா்.
காரைக்கால் மீனவா்கள்...
மாண்டஸ் புயல் காரணமாக காரைக்கால் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கடந்த 5-ஆம் தேதி புதுச்சேரி மாநில மீன்வளத் துறை அறிவுறுத்தியது. இதனால், இம்மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களில் உள்ள ஃபைபா் படகுகளை புயல் காரணமாக பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினா். விசைப் படகுகள் மீன்பிடித் துறைமுகத்திலும், அரசலாற்றங்கரையிலும் நிறுத்தப்பட்டிருந்தன.
புயல் கரையை கடந்த நிலையில், காரைக்கால் கடல் பகுதி சனிக்கிழமை காலை இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதையடுத்து கிராமப்புறங்களில் இருந்து ஃபைபா் படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்னா்.
இந்தநிலையில், விசைப்படகு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலுக்கு புறப்பட்டுச் சென்றன. 200-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு சென்றுள்ளதாகவும், இவா்கள்3 அல்லது 5 நாள்களுக்குப் பிறகு கரை திரும்புவா், அப்போது முதல் ஏற்றுமதித் தரத்தினாலான மீன்கள் காரைக்கால் துறைமுகத்துக்கு வருமென மீனவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.