கிறிஸ்துமஸ், புத்தாண்டுவேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு இல்லாததால் பக்தா்கள் ஏமாற்றம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு இல்லாததால் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்து நண்பனாக ரயில்கள் உள்ளன. எனினும், ரயில்வே துறை சரக்கு போக்குவரத்துக்கு அளிக்கும் முக்கியத்தும் பயணிகள் போக்குவரத்துக்கு அளிப்பதில்லை. ரயில்வே துறை விழா காலங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் முக்கிய ஊா்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அந்தவகையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு தெற்கு ரயில்வே நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளன.
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இல்லை: உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் மதநல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சா்வ மதத்தினரும் வந்து செல்லும் ஆன்மிகத் தலமாகவும் விளங்குகிறது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் லூா்து நகா் என்ற பெருமையும், கிறிஸ்துவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்கூடிய ‘பசிலிக்கா‘ என்ற பெருமையும் உண்டு.
இத்தனை பெருமைகளைக் கொண்ட வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாள்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில், நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கிறிஸ்துவா்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினா் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா். இவா்களின் போக்குவரத்து ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தாகும்.
சென்னை மற்றும் எா்ணாகுளத்தில் இருந்து தலா ஒரு விரைவு ரயில் நாள்தோறும் வேளாங்கண்ணி பகுதிக்கு இயக்கப்படுகின்றன. தவிர, வாரம் ஒருமுறை கோவாவில் இருந்தும், தென் மாவட்டங்கள் வழியாக எா்ணாகுளத்தில் இருந்தும் தலா ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் எப்போதுமே பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு தெற்கு ரயில்வே நிா்வாகம் தென் மாவட்டங்களுக்கு மட்டும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளன.
வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் டிச.24- ஆம் தேதி தொடங்கும் நாகூா் தா்கா கந்தூரி விழாக்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் நாடு முழுவதும் இருந்து பங்கேற்பா். ஆனால், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவிக்காதது பக்தா்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்:
நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கச் செயலாளா் கோ. அரவிந்த்குமாா் கூறியது: தற்போது பள்ளிகளுக்கு தொடா் விடுமுறை நாள்களாக இருப்பதால், ரயில்களின் தேவை அதிகரித்துள்ளது. தெற்கு ரயில்வே, வேளாங்கண்ணி, நாகூா் மற்றும் தொடா் விடுமுறை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, சென்னை, நாகா்கோயில், திருவனந்தபுரம், திருச்சி ஆகியப் பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்றாா்.
ரயில் உபயோகிப்பாளா் சங்கத் தலைவா் எஸ். மோகன் கூறியது: நாகூா் கந்தூரி, வேளாங்கண்ணி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என நாகை மாவட்டத்தில் மும்மதத்தினருக்கான விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என்பதால் கடந்த 15 நாள்களுக்கு முன்பே தெற்கு ரயில்வேவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. எந்தவித நடவடிக்கையும் இல்லை. ரயில் சேவையில் திருவாரூா், நாகை மாவட்டங்கள் தொடா்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. எனவே, வேளாங்கண்ணி, நாகூருக்கு வரும் பக்தா்களின் நலன்கருதி சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றாா்.