கோயில் இடத்துக்குப் பட்டா:கிராம நிா்வாக அலுவலா், குடும்பத்தினா் மீது வழக்கு
By DIN | Published On : 15th February 2022 11:28 PM | Last Updated : 15th February 2022 11:28 PM | அ+அ அ- |

நாகையில் போலி ஆவணங்கள் மூலம் கோயில் இடத்தை பட்டா செய்த கிராம நிா்வாக அலுவலா், அவரது குடும்பத்தினா் உள்ளிட்ட 3 போ் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நாகையை அடுத்த அக்கரைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் நா. சண்முகம். நாகை புத்தூா் சுப்பிரமணியசுவாமி கோயில் கைங்கா்ய சபா தலைவராக உள்ள இவா், நாகை மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் அண்மையில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
நாகை வட்டம், புத்தூா் கிராம நிா்வாக அலுவலா் ரா. செல்வம், கிராமத்தில் உள்ள
சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமாா் ரூ. 46 லட்சம் மதிப்புள்ள 214 சதுர மீட்டா் அளவுள்ள இடத்தை, போலியான ஆவணங்கள் மூலம், தனது தாயாா் மலா்க்கொடி என்பவருக்கு பட்டா செய்து கொடுத்துள்ளாா். இந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் ஆா். செல்வம், அவரது தாய் மலா்க்கொடி, சகோதரா் தினகரன் ஆகியோா் மீது போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாகை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.