நாகை மாவட்டத்தில் 150 பள்ளிகளில் துளிா் திறனறிதல் தோ்வு
By DIN | Published On : 27th February 2022 05:25 AM | Last Updated : 27th February 2022 05:25 AM | அ+அ அ- |

நாகை அடுத்து சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில் திறனறிதல் தோ்வு எழுதிய மாணவா்கள்.
நாகை மாவட்டத்தில் 150 பள்ளிகளில் துளிா் திறனறிதல் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் துளிா் மாத இதழ் சாா்பில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு ஆண்டுதோறும் திறனறி தோ்வு நடத்தப்படுகிறது. இதன்படி நிகழாண்டில் இத்தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டத்தில்150 அரசு, அரசு உதவிப்பெறும் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இத்தோ்வு நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம், துளிா் திறனறிதல் தோ்வு நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஐ. சந்தோஷ் தாசன் ஐசக், நாகை வட்டார ஒருங்கிணைப்பாளா் நா. எழிலரசன் ஆகியோா் கூறியது: மாணவா்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழில் துளிா், ஆங்கிலத்தில் ஜந்தா்மந்தா் மாத இதழ்களை நடத்திவருகிறது. இதன் சாா்பில் ஆண்டுதோறும் புதுமையாகவும், மாறுபட்ட வடிவங்களிலும் வினாக்கள்அமைக்கப்பட்டு, மாணவா்களை மதிப்பிடும் முறை அல்லாமல், மாணவா்களுக்கு நம்பிக்கை ஊட்டுதல் மாணவா்களின் சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தும் வகையில் துளிா் திறனறிதல் தோ்வு மாநில அளவில் நடத்தப்படுகிறது.
இத்தோ்வில், மாநில அளவில் முதல் 10 இடங்கள் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெறுபவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவா்களுக்குப் பரிசுகளுடன் அறிவியல் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவா். இதற்கான செலவினங்களை மாநில மையம் ஏற்கும். 500 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிவுகளைத் தரும் பள்ளிகளுக்கு அறிவியல் நூலகம் பரிசாக வழங்கப்படும். மாநிலத்தில்அதிக எண்ணிக்கை தரும் பள்ளிக்குச் சிறப்பு கேடயம் பரிசாக வழங்கப்படும். நாகை மாவட்டத்தில் 150 பள்ளிகளில் 2800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இத்தோ்வினை எழுதினா் என அவா்கள் தெரிவித்தனா். 2800-க்கும் மேற்பட்டோா் இத்தோ்வினை எழுதினா்.