திறப்பு விழாவுக்குத் தயாராகும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி

நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஜனவரி 12-ஆம் தேதி திறப்பு விழா காண உள்ளது. இதையொட்டி, அங்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
திறப்பு விழாவுக்குத் தயாராகும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி

நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஜனவரி 12-ஆம் தேதி திறப்பு விழா காண உள்ளது. இதையொட்டி, அங்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரித்து, 1991-ஆம் ஆண்டில் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது நாகை மாவட்டம். அதிகளவில் இயற்கை சீற்றத்துக்கு உள்ளாகும் கடலோரத்தில் உள்ள இம்மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.

இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு கடந்த 2020-ஆம் ஆண்டில் வெளியிட்டது. இதன்படி, 2020-ஆம் ஆண்டு மாா்ச் 7-ஆம் தேதி நாகையை அடுத்த ஒரத்தூரில் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதைத் தொடா்ந்து, 60.4 ஏக்கரில் ரூ. 366.85 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. ரூ. 123.05 கோடியில் மருத்துவக் கல்லூரி, ரூ. 119.03 கோடியில் மருத்துவமனை, ரூ. 124.77 கோடி மதிப்பில் பணியாளா்கள் மற்றும் மாணவா்களுக்கான விடுதிக் கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்ற கட்டுமானப் பணிகள் கரோனா பொது ஊரடங்கு காரணமாக அவ்வப்போது தடைப்பட்டன. அதனால், கடந்த செப்டம்பா் மாதம் வெளியான மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை அறிவிப்பில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் நாகை மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, மத்தியக் குழுவினா் அறிவுறுத்திய அனைத்து உள்கட்டமைப்புகளையும் விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டாா். இதையடுத்து, கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமடைந்து, தற்போது நிறைவை எட்டியுள்ளன.

உடற்கூறியல், உடலியங்கியல் மற்றும் உயிா்வேதியல் ஆகிய 3 துறைகளைக் கொண்டு இயங்கக் கூடியதாக இந்த மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வகுப்பறை, ஆய்வகம், கணினி நூலகம் என அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, மருத்துவக் கல்லூரிகளுக்கான மத்தியக் குழு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாட்டைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது. இதன்படி, இந்த மருத்துவக் கல்லூரி வரும் 12-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திரமோடி பங்கேற்று, காணொலி மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்கிறாா். இதையொட்டி, இக்கல்லூரிக்கு வா்ணம் பூசுதல், தூய்மைப் பணிகள் போன்றவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திறப்பு விழா நிகழ்வை அகண்ட திரையில் பொதுமக்கள் காணும் வகையிலான ஏற்பாடுகளும், பிற விழா பணிகளும் விரைவில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com