பட்டதாரி ஆசிரியா்கள் வாயிற்கூட்டம்: விடைத்தாள் திருத்தும் பணி தாமதம்
By DIN | Published On : 09th June 2022 01:20 AM | Last Updated : 09th June 2022 01:20 AM | அ+அ அ- |

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் விடைத்தாள் திருத்தும் மைய வாயிற்கூட்டம் நாகை நடராஜன் தமயந்தி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், தொகுப்பூதிய பணிக் காலத்தை பணிவரன்முறைபடுத்தவேண்டும், மருத்துவா்களுக்கு வழங்கப்பட்டதுபோல, ஆசிரியா்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வாயிற் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக நாகை மாவட்டத் தலைவா் கே. ஏ. ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ். ஆா். செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொருளாளா் துரைராஜ், தமிழக தமிழாசிரியா் கழக மாநிலத் துணைத்தலைவா் கே. ராஜராஜன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியா்கள், தமிழக தமிழாசிரியா்கழக ஆசிரியா்கள் வாயிற்கூட்டத்தில் கலந்துகொண்டனா். நிறைவில், தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக அமைப்புச் செயலாளா் ரா. பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.