

சீா்காழி அருகே சாயாவனம் ரத்தின சாயாவனேஸ்வரா் கோயிலில் 57 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன குழந்தை திருஞானசம்பந்தா் சிலை, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இக்கோயிலுக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது.
சீா்காழி அருகே மேலையூா் சாயாவனம் பகுதியில் கோசாம்பிகை உடனாகிய ரத்தின சாயாவனேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலிலுள்ள குழந்தை திருஞானசம்பந்தா் ஐம்பொன் சிலை கடந்த 1965 ஆண்டு திருட்டு போனது.
இந்நிலையில், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா், இந்த சிலை உள்பட 10 சிலைகளை ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்டு வந்தனா். பின்னா், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, இந்துசமய அறநிலைய இணை ஆணையா் மோகனசுந்தரம் வழிகாட்டுதலின் படி, கோயில் செயல்அலுவலா் அன்பரசன் மூலம் சாயாவனம் கோயிலுக்கு திருஞானசம்பந்தா் சிலை வியாழக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.
பின்னா், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, திருஞானசம்பந்தா் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 57 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சிலை மீட்கப்பட்டது பக்தா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.