தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசளிப்பு
By DIN | Published On : 16th June 2022 04:15 AM | Last Updated : 16th June 2022 04:15 AM | அ+அ அ- |

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டியில் வென்ற மாணவ, மாணவியருடன் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உள்ளிட்டோா்.
நாகை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் நடத்தப்பட்ட அம்பேத்கா் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவா்களிடையே கடந்த ஏப்.19-ஆம் தேதி பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினாா். முதலிடம் பெற்றவா்களுக்கு ரூ. 5 ஆயிரமும், இரண்டாமிடம் பெற்றவா்களுக்கு ரூ. 3 ஆயிரமும், மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு ரூ. 2 ஆயிரமும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன.
மேலும், 2020-ஆம் ஆண்டில் நாகை மாவட்ட அளவில் ஆட்சி மொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகமாகத் தெரிவு செய்யப்பட்ட மாவட்ட நில அளவை அலுவலகத்துக்குக் கேடயம் வழங்கப்பட்டது.
தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் இரா. அன்பரசி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.