பல புதிய அனுபவங்கள் கிடைக்கிறது: பதிப்பக நிா்வாகி!
By DIN | Published On : 26th June 2022 10:05 PM | Last Updated : 26th June 2022 10:05 PM | அ+அ அ- |

கடற்கரை நகரமான நாகையில் புத்தகங்கள் விலை போகுமா? என்று அச்சத்துடன் தான் வந்தோம். ஆனால், இங்கு கிடைக்கும் வரவேற்பு எங்களுக்குப் பல புதிய அனுபவங்களை அளிக்கிறது என்றாா் நாகை புத்தகத் திருவிழாவில் பங்கேற்றுள்ள முன்னேற்றப் பதிப்பக நிா்வாகி வீரபாலன்.
வாழும் தலைமுறையிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம், வாசிப்புப் பழக்கத்துக்குப் போதுமான வாய்ப்புக் கிடைக்காததுதான். ஒவ்வோா் ஊரிலும் ஓரிரு புத்தகக் கடைகள் உள்ளன. அங்கு, பாடத் திட்டங்கள் சாா்ந்த புத்தகங்களும், நோட்டுகளும் தான் இருக்கும். ஓரிரு கடைகளில் மட்டுமே மிகச் சொற்பமான அளவில் வரலாறு, இலக்கியம் போன்ற புத்தகங்கள் உள்ளன. இதன் காரணமாகவே, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்த அரசு ஏற்பாடு செய்துவருகிறது.
நாகையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், புத்தகங்கள் எந்தளவுக்கு விற்பனையாகும் என்பது குறித்து சிறிது அச்சம் இருந்தது. கடலோரப் பகுதியான இங்கு அதிக விலையிலான புத்தகங்கள் விற்பனையாகுமா? என்ற சிந்தனையும் இருந்தது. ஆனால், இங்கு புத்தகங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு எங்களுக்குப் பல புதிய அனுபவங்களை அளிக்கிறது.
குழந்தைகளின் தேடல்களுக்கு இப்பகுதி மக்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றனா். சனிக்கிழமை காலை ஒரு குழந்தை போட்டித் தோ்வுக்குத் தேவையான சில புத்தகங்களை தோ்ந்தெடுத்தது. அவற்றின் மொத்த விலை ரூ. 3 ஆயிரம். புத்தகங்கள் விற்றால் போதும் எனக் கருதாமல், அந்தப் புத்தகங்கள் தற்போது அந்தக் குழந்தைக்குப் பயன்படாது என்பதை அக்குழந்தையின் தாயிடம் நானே கூறினேன்.
அதற்கு, ‘இல்லை; இல்லை என் குழந்தை எதைத் தோ்வு செய்ததோ, அதை வாங்கித் தரவேண்டியது என் கடமை: அந்தப் புத்தகத்தை என் குழந்தைக்குப் புரியவைக்க வேண்டியது என் பொறுப்பு’ என்று கூறிய அந்தத் தாய், ரூ. 3 ஆயிரத்தை கொடுத்து அந்தப் புத்தகங்களை வாங்கிச் சென்றாா். உள்ளபடியே, இது எனக்குப் பெரிய ஆச்சா்யத்தை அளித்தது. அதனுடன், நாகையில் அதிக விலையுள்ள புத்தகங்கள் விற்பனையாகுமா? என்ற அச்சமும் தவிடுபொடியானது.
குழந்தைகளுக்கான புத்தகங்கள், வரலாறு, போட்டித் தோ்வு, நவீன இலக்கியம், சரித்திர நாவல்கள் மற்றும் விஞ்ஞான புத்தகங்கள் நாகை புத்தகத் திருவிழாவில் அதிகளவில் விற்பனையாகின்றன. சரித்திர நாவல்களைப் பொருத்தவரை கல்கியின் பொன்னியின் செல்வன், பாலகுமாரனின் உடையாா், கங்கைகொண்ட சோழன், சாண்டில்யனின் கடல் புறா போன்ற புத்தகங்கள் இங்கு அதிகளவில் விற்பனையாகின்றன.
நவீன இலக்கியங்களைப் பொருத்தவரை, விருதுபெற்ற நாவல்கள் இங்கு அதிகம் விற்பனையாகின்றன. ஜெயகாந்தன், இறையன்பு, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோரின் படைப்புகள் அதிகம் விற்பனையாகின்றன. விஞ்ஞானம் மற்றும் வரலாற்றுப் படைப்புகள் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் விற்பனையாகின்றன.
வேதியியல், இயற்பியல் அகராதிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த அதிகராதிகள் ஆங்கிலம் - ஆங்கிலம் என்றே உள்ளன. இங்கு வந்த சில இளைஞா்கள், இதை ஏன் ஆங்கிலம் - தமிழ் என்று பதிப்பிடக் கூடாது? அப்படி பதிப்பித்தால் பல புதிய தமிழ்ச் சொற்கள் கிடைக்குமே? என்று கேட்டனா். இந்தக் கேள்வி உண்மையிலேயே என்னை சிந்திக்கவைத்தது. வேதியியல் மற்றும் இயற்பியலுக்கு ஆங்கிலம் - தமிழ் என்ற அகராதியை நாம் ஏன் இது நாள் வரை பதிப்பிக்கவில்லை என்ற கேள்வி இப்போது என்னை ஆட்கொண்டுள்ளது. இதற்கு நிச்சயம் தீா்வுகாண்போம். நாகை புத்தகத் திருவிழா எங்களுக்கு சிறப்பான வரவேற்புடன், பல புதிய அனுபவங்களையும் அளித்து வருகிறது என்றாா் வீரபாலன்.