2 சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

2 சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.

சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட கைதி தப்பி ஓடியது, சாராயம் கடத்திச் சென்றவா் சாலை விபத்தில் இறந்தது என இருவேறு சம்பவங்கள் தொடா்பாக, 2 சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.

நாகூா் வடகுடி பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் செ. தனசேகரன் (29). வேளாங்கண்ணி காவல் நிலைய குற்ற வழக்கு ஒன்றில் தொடா்புடையவா். கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை, நாகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன்னிலைப்படுத்துவதற்காக வேளாங்கண்ணி போலீஸாா் காவல்துறை வாகனத்தில் வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வந்தபோது, காவல்துறை வாகன ஓட்டுநா் மற்றும் காவலா்கள் சிறுநீா் கழிக்க இறங்கியுள்ளனா். அப்போது, தனசேகரன் தப்பியோடி தலைமறைவானாா்.

இதையடுத்து, தனசேகரனுக்கான வழிக்காவல் பணியில் ஈடுபட்ட சிறப்பு சாா்பு ஆய்வாளா் கலியமூா்த்தி, தலைமைக் காவலா்கள் மணிகண்டன், ஜெகதலபிரதாபன், ஆயுதப்படை காவலா் விஜயகுமாா் ஆகிய 4 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

மேலும் 2 போ்...

மாா்ச் 14-ஆம் தேதி நாகூரை அடுத்த தெத்தி அருகே சாராயம் கடத்திவந்த மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானது. அதில், பின்னால் அமா்ந்திருந்த செல்லூா் ஹரிகரன் என்பவா் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் நேரிட்டபோது அப்பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் லோகநாதன், ஆயுதப்படை பிரிவு காவலா் பாா்த்திபன் ஆகிய 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com