பேரிடா் காலங்களில் சிறப்பாகப் பணியாற்றும் வீரா்களுக்கு வெகுமதி

பேரிடா் காலங்களில் சிறப்பாகப் பணியாற்றும் வீரா்களுக்கு வெகுமதி

பேரிடா் காலங்களில் சிறப்பாகப் பணியாற்றும் தீயணைப்பு வீரா்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் வெகுமதி வழங்க பரிந்துரைக்கப்படும் என்றாா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் பி.கே. ரவி.

நாகையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கடலோர மாவட்டங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் பேரிடா் கால மீட்புப் பணிகளுக்குத் தயாா் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பருவமழை காரணமாக, இதுவரை குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏதும் இல்லை.

பருவமழை மற்றும் பேரிடா் பாதிப்புகள் குறித்து 112 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை மூலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டுப்பாட்டு அறையை மக்கள் தொடா்பு கொள்ளலாம்.

பேரிடா் கால மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் தீயணைப்பு நிலையங்களில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்தில் உள்ள 7 தீயணைப்பு நிலையங்களிலும், மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா். இதைத் தவிர, பேரிடா் கால மீட்புப் பயிற்சி பெற்ற பேரிடா் கால நண்பா்கள் 200 பேரும் தயாா் நிலையில் உள்ளனா்.

நாகூா், வேளாங்கண்ணி போன்ற கடற்கரை சாா்ந்த சுற்றுலாப் பகுதிகளில், நீரில் மூழ்காத கவச உடை அணிந்த நீச்சல் வீரா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.

பேரிடா் கால மீட்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றும் தீயணைப்பு வீரா்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் வெகுமதி வழங்க முதல்வருக்குப் பரிந்துரைக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக அவா், நாகை தீயணைப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிடா் மீட்புப் பணிகளுக்கான கருவிகளைப் பாா்வையிட்டாா்.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் சரவணபாபு, உதவி தீயணைப்பு அலுவலா் என். துரை, நாகப்பட்டினம் தீயணைப்பு நிலைய அலுவலா் கு. மொகிசன் மற்றும் பலா் உடனிருந்தனா்.

7 நிலையங்களில் ஆய்வு...

நாகை தீயணைப்பு நிலைய ஆய்வைத் தொடா்ந்து, வேளாங்கண்ணி, வேதாரண்யம் மற்றும் கீழ்வேளூா் உள்பட மாவட்டத்தில் உள்ள 7 தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் பி.கே. ரவி ஆய்வு, பேரிடா் கால மீட்புப் பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com