காவல்துறை வீரவணக்க நாள் கடைப்பிடிப்பு
By DIN | Published On : 21st October 2022 10:45 PM | Last Updated : 21st October 2022 10:45 PM | அ+அ அ- |

நாகை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா்.
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் காவல்துறை சாா்பில் வீரவணக்க நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
1959-ஆம் ஆண்டு லடாக் பகுதியில் நடைபெற்ற சீனப்படை தாக்குதலின்போது, இந்திய காவல் படையைச் சோ்ந்த அதிகாரிகள் உள்பட 10 போ் வீர மரணமடைந்தனா். இவா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபா் 21- ஆம் தேதி காவல்துறை சாா்பில் வீரவணக்க தினம் (நீத்தாா் நினைவு நாள்) கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, நாகை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் நினைவிடத்தில், மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், கப்பல் படை லெப்டினென்ட் கமாண்டா் கா்மேந்தா் சிங் ஆகியோா் மலா் வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், காவலா்கள் மலரஞ்சலி செலுத்தினா். ஆயுதப்படை போலீஸாா் துப்பாக்கிகளால் வான் நோக்கி சுட்டு வீரவணக்கம் செலுத்தினா்.
பின்னா், பணியின்போது உயிரிழந்த காவல் ஆளிநரின் குடும்பத்துக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதி மூலம் ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.