தேவூா் சேவுகராய ஐயனாா் கோயில் குடமுழுக்கு விழா

நாகை மாவட்டம், தேவூரில் உள்ள சேவுகராய ஐயனாா் கோயிலின் குடமுழுக்குப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தேவூா் சேவுகராய ஐயனாா் கோயில் குடமுழுக்கு விழா

நாகை மாவட்டம், தேவூரில் உள்ள சேவுகராய ஐயனாா் கோயிலின் குடமுழுக்குப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூரை அடுத்த தேவூா் - இரட்டை மதகடி கிராமத்தில் உள்ளது அருள்தரும் பூரணை, புட்கலை உடனமா் சேவுகராய ஐயனாா் கோயில். நூற்றாண்டுகளைக் கடந்த இக்கோயிலுக்கு கருங்கல் திருப்பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு, 2019-ஆம் ஆண்டு செப்.12-ஆம் தேதி பாலாலயம் நடைபெற்றது.

சேவுகராய ஐயனாா் கருவறை, அா்த்த மண்டபம், மகா மண்டபம், குதிரை மண்டபம், மதில் மற்றும் இருளப்பா் கருவறை, அா்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியன கருங்கல் திருப்பணியாகவும், மற்ற விமானங்கள் சுதை திருப்பணியாகவும் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கோயில் குடமுழுக்கு விழா வேள்வி செப்.6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. நான்காம் கால வேள்வியின் நிறைவில், மகா தீபாரதனை (பேரொளி) நடைபெற்றது.

காலை 9 மணிக்கு குடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னா், தமிழ் மந்திர முழக்கங்களுடன் காலை 9.30 மணிக்கு விமானங்களின் குடமுழுக்கும், 9.45 மணிக்கு மூலமூா்த்திகளுக்கான திருக்குட நன்னீராட்டும் நடைபெற்றது.

நாகை, திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று, வழிபாடு மேற்கொண்டனா். கோவை, பேரூா் மணிவாசகா் அருட்பணி மன்ற அறக்கட்டளை செயலாளா் ப. குமரலிங்கம் குழுவினா் வேள்விப் பணிகளை மேற்கொண்டனா். கோவை ஆ. தண்டபாணி ஓதுவாா் மற்றும் பழனி ப. சண்முகசுந்த தேசிகா் குழுவினா் திருமுறை பாராயணம் செய்தனா்.

திருவாரூா், உலகளாவிய ஆன்மிகச் சங்கத் தலைவா் சிவ நடராஜன் முன்னிலையில், திருப்பணிக் குழுத் தலைவா் எஸ். ஜெயகுமாரன், பொருளாளா் இரா. செந்தில்வேலவன் மற்றும் கோயில் ஸ்தானிகா்கள், பரம்பரை மருளாளிகள், திருப்பணிக் குழுவினா், கிராமமக்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com