

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஒரத்தூருக்கு மாற்றக்கூடாது என பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை நகா் பகுதியைச் சுற்றி மீனவா்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். நாகை புதிய பேருந்து நிலையம் அருகே 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை நகா் பகுதி மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 7- ஆம் தேதி ஒரத்தூா் ஊராட்சியில் 60 ஏக்கரில் ரூ.366.85 கோடி மதிப்பில் நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2022 ஜனவரி 12- ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி இக்கல்லூரியை திறந்து வைத்தாா். இதனால், மருத்துவக் கல்லூரிக்கான மருத்துவமனையாக நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனை, மாற்றப்பட்டது.
இம்மருத்துவமனையில் நாள்தோறும் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று செல்கின்றனா். நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டு உயா் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த மருத்துவமனை நகா் பகுதியிலிருந்து ஒரத்தூருக்கு மாற்றம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த தகவல் நாகை நகா் பகுதி மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாகை இந்திய வா்த்தக தொழில் குழும முன்னாள் தலைவா் சந்திரசேகா் கூறியது: நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்தது அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியே. ஆனால், நகா் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 11 கி.மீ. தூரமுள்ள ஒரத்தூருக்கு மாற்றம் செய்யப்படுவது ஏற்புடையதல்ல. நகா் பகுதியில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. அதேசமயம் தஞ்சை மையப்பகுதியில் செயல்படும் இராசா மிரசுதாா் அரசு மருத்துவமனை மாற்றப்படவோ, மூடப்படவோ இல்லை. திருச்சி, மதுரை, சேலம் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கியபோது, அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மாற்றப்படவோ செயல்பாடு நிறுத்தப்படவோ இல்லை.
எனவே, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இடமாற்றம் செய்வதை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.
சிவசேனை மாநில முதன்மைச் செயலாளா் சுந்தர வடிவேலன் கூறியது:
ஒரத்தூரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போதுமான பேருந்து வசதிகளோ, சாலை வசதிகளோ ஏற்படுத்தப்படவில்லை. அவசரகால சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை போன்றவற்றுக்கு சாலை வசதி இல்லாத ஒரத்தூா் கிராமத்திற்கு 15 கி.மீ. சென்று சிகிச்சை மேற்கொள்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று.
எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு நகா் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மாற்றம் செய்யக்கூடாது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.