வேதாரண்யத்தில் கோயில் குடமுழுக்கு தடை செய்யப்பட்டதால் பரபரப்பு: போலீஸார் குவிப்பு

வேதாரண்யத்தில் நாளை நடைபெறவிருந்த கோயில் குடமுழுக்கு யாகசாலை பூசைகள் நடைபெற்ற நிலையில் அரசு தரப்பில் இன்று(செப்.3) தடை செய்யப்பட்டு
கோயில் நுழைவு வாயிலில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.
கோயில் நுழைவு வாயிலில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.

வேதாரண்யத்தில் நாளை நடைபெறவிருந்த கோயில் குடமுழுக்கு யாகசாலை பூசைகள் நடைபெற்ற நிலையில் அரசு தரப்பில் இன்று(செப்.3) தடை செய்யப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவிவருகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிர்த ஏரிக்குள் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீராழி மண்டபத்துடன் கூடிய தடாக நந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை திங்கள்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஏரியின் மையப் பகுதியில் முன்னாள் அமைச்சரும் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் தலைமையிலான திருப்பணிக் குழுவின் சார்பில் நீராழி மண்டபத்தில் 6 அடி உயரத்தில் ஒரே கல்லால் செய்யப்பட்ட நந்தி சிலையுடன் கூடிய நந்தீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது.

இந்த கோயிலில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன. அழைப்பிதழில் முன்னாள் அமைச்சரும் சட்டப் பேரவை உறுப்பினருமான  ஓ.எஸ்.மணியன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பெயர்கள் இருந்தன. பிறதுறை அதிகாரிகள் பெயரோ அல்லது ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், பிரதிநிகள் பெயரோ அதில் இல்லை. ஆனால், விழா ஏற்பாட்டுப் பணிகள் களைகட்டி வந்தன.

இதனிடையே, விழா குறித்த விளம்பர பதாகைகளில் அதிமுக பிரமுகர்கள் படங்களுடன் பல இடங்களில் வைக்கப்பட்டது. இந்த பதாகைகள் திடீரென வெள்ளிக்கிழமை நகராட்சி நிர்வாகம், போலீஸாரால் அகற்றப்பட்டது. இதையடுத்து குடமுழுக்கு ஏற்பாட்டாளர்களுக்கும் பதைகையை அகற்றியவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து சனிக்கிழமை மாலை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனிடையே ஏரியின் நடுவில் உள்ள கோயிலுக்கு படகுகள் மூலம் பூஜைக்கானப் பொருள்கள் கொண்டுச் செல்லப்பட்டது. மேலும்,ஏரிக்கரையின் படித்துறையில் யாகசாலை அமைக்கப்பட்டு சனிக்கிழமை இரவு முதல்கால பூஜை நடந்து முடிந்தது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடமுழுக்குச் செய்ய தடை விதிக்கப்பட்டு, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் தகவல் அறிந்த ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர்கள், பக்தர்கள் கோயிலின் அருகே பிராதான சாலையில் திரண்ட அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

யாகசாலையில் இருந்த புனித நீர் நிரப்பிய கலசங்கள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொள்ள பக்தர்கள் போலீஸார் அனுமதிக் கோரினர். இதையடுத்து பூஜை பொருள்களை எடுத்து வந்து தடைசெய்யப்பட்ட பகுதிக்கு வெளியே அறநிலையத்துறையினர் கொடுத்தற்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதனால் போலீஸாரே எடுத்துக் கொடுத்த பொருள்களை வாங்கிக் கொண்ட பக்தர்கள் சாலையில் தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதனிடையே,அனுமதி மறுப்பு உத்தரவு வரப்போவதை ஏற்கனவே அறிந்துக்கொண்ட பக்தர்கள் சிலர் முதல்கால பூஜை நடைபெற்ற நிலையில், கோயிலின் குடமுழுக்கையும் ரகசியமாக நடத்திவிட்டாதக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com