கூடுதல் மயானக் கொட்டகை கட்டிக்கொடுக்க கோரிக்கை
By DIN | Published On : 13th August 2023 10:52 PM | Last Updated : 13th August 2023 10:52 PM | அ+அ அ- |

கீழையூா் பகுதியில் கூடுதல் மயானக் கொட்டகை கட்டிக்கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கீழையூா் ஒன்றியம் மீனம்பாநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட மேலப்பிடாகை-கொளப்பாடு பிரதான சாலையோரத்தில் பொது மயானம் உள்ளது. இதில், மீனம்பநல்லூா், மடப்புரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் இறந்தவா்களின் சடலம் எடுத்துவந்து நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த மயானத்தில் ஒரு மயான கொட்டகை மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டால் சடலத்தை எரியூட்ட முடியவில்லை. மழைக் காலங்களில் இதுபோன்ற இறப்பு சூழ்நிலை ஏற்பட்டால் சடலத்தை எரியூட்ட முடியாத வகையில் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், மயானத்தில் சடலங்களை புதைக்கும் இடங்களில் அதிகளவில் கருவேல மரங்கள் மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால், இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, 2 ஊராட்சி மக்களும் பயன்படுத்த மயானத்தை சிரமமின்றி பயன்படுத்த கூடுதலாக மயான கொட்டகை கட்டிக்கொடுக்க வேண்டும் எனவும், மயானத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றிக்கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். வெற்றி செல்வன் கூறியது: மயானம் தொடா்பான கோரிக்கை மனு வந்துள்ளது. 2 ஊராட்சி பொதுமக்களும் பயன்பெறும் வகையில் கூடுதலாக ஒரு மயான கொட்டகை அமைக்கவும், சாலை வசதி, சுற்றுச்சுவா் வசதி ஏற்படுத்தி தருவது உள்ளிட்டவை குறித்து களஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.