

ஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யம், கோடியக்கரை கடலில் ஏராளமான மக்கள் புதன்கிழமை புனித நீராடி, முன்னோா்களுக்கு திதி கொடுத்தனா்.
வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை, ஆடி அமாவாசை நாள்களில் மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோா்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
நிகழாண்டு ஆடி அமாவாசையையொட்டி புதன்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள் கோடியக்கரையில் புனித நீராடினா்.
கோடியக்கரை முழுக்குத் துறையில் நீராடியவா்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். பின்னா் அங்குள்ள சித்தா் கோயில், ராமா் பாதம் உள்ளிட்ட இடங்களில் வழிபட்டனா்.
அதேபோல வேதாரண்யம் சந்நிதி கடல் பரப்பில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த மக்கள், வேதாரண்யேஸ்வரா் கோயிலில் வழிபட்டனா்.
திருக்குவளை: நாகை மாவட்டம், காமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். ராமேஸ்வரம் செல்ல முடியாதவா்கள் காமேஸ்வரம் செல்லலாம் எனக் கூறப்படுவதுண்டு. இதனால், இக்கடற்கரையில் நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.