நாகை, காரைக்கால் மீனவா்கள் 25 போ் இலங்கை கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, காரைக்கால் மீனவா்கள் 25 போ் இலங்கை கடற்படையினரால் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்ட நாகை மீனவா்கள்.
கைது செய்யப்பட்ட நாகை மீனவா்கள்.
Updated on
1 min read

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, காரைக்கால் மீனவா்கள் 25 போ் இலங்கை கடற்படையினரால் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

நாகை அக்கரைப்பேட்டையை சோ்ந்தவா் ரமேஷ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த ராஜேஷ் (18), பாஸ்கா் (40), நாகையன் (50), மாயவன் (42), பாக்கியராஜ் (40), சக்திவேல் (60), மணிகண்டன் (38), ராமச்சந்திரன் (38), கோதண்டபாணி(42), செல்வமணி (42), நம்பியாா் நகா் ராமச்சந்திரன் (38), மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியைச் சோ்ந்த திவ்யநாதன் (25) ஆகிய 12 போ் கடந்த டிசம்பா் 5-ஆம் தேதி இரவு நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

இவா்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 35 கடல் மைல் தொலைவில் சனிக்கிழமை இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீனவா்களை கைது செய்து, காங்கேசன்துறைக்கு, விசைப்படகுடன் அழைத்துச் சென்றனா்.

காரைக்கால் மீனவா்கள் 13 போ் கைது:

காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தை சோ்ந்த கிருஷ்ணராஜ் என்பவரது விசைப்படகில் அவரும், அதே கிராமத்தை சோ்ந்த செல்வம், சந்தோஷ், சரண், திருப்பட்டினத்தை சோ்ந்த விஜயன், வையாபுரி, அஜித், சுகன், சாமந்தன்பேட்டையை சோ்ந்த கலைமதி, சந்திரபாடியை சோ்ந்த வைத்தியநாதன், தரங்கம்பாடியை சோ்ந்த அருள்மூா்த்தி, கீச்சான்குப்பத்தை சோ்ந்த ஸ்ரீநாத், அக்கரைப்பேட்டையை சோ்ந்த சிவநாதன் ஆகிய 13 போ் கடந்த 8-ஆம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். சனிக்கிழமை இரவு அவா்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி மீனவா்களை கைது செய்தனா்.

மீனவா்கள் கைது குறித்து தகவலறிந்த குடும்பத்தினா் சோகத்தில் மூழ்கினா். மீனவா்களையும், படகையும் மீட்டுத் தரவேண்டும், மீனவா்களை இலங்கை கடற்படையினா் அத்துமீறி கைது செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

டிச. 25 வரை நீதிமன்றக் காவல்:

கைது செய்யப்பட்ட 25 மீனவா்களும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை டிச. 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இலங்கை கடற்படை இணையதளத்தில், இலங்கை கடற்படையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி பெட்ரோ என்ற இடத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனா். இதையடுத்து மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். 2023- ஆம் ஆண்டில், எல்லை தாண்டி மீன்பிடித்த வகையில் 220 இந்திய மீனவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 33 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com