ஜூன் 9-இல் நாட்டுப்படகுகள் ஆய்வு
By DIN | Published On : 02nd June 2023 01:20 AM | Last Updated : 02nd June 2023 01:20 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் ஜூன் 9-ஆம் தேதி நாட்டுப் படகுகள் குறித்த நேரடி ஆய்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ் இயந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் பொருத்தப்படாத அனைத்து நாட்டுப் படகுகளின் நேரடி ஆய்வு வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே படகு உரிமையாளா்கள் ஆய்வு நாளான்று படகை பதிவு செய்யப்பட்ட தங்குதளத்தில் நிறுத்திவைக்க வேண்டும்.
படகு உரிமையாளா்கள், படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், படகு காப்பீடு உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களை ஆய்வு குழுவினரிடம் காண்பித்து, அவற்றின் நகலை அளிக்க வேண்டும்.
மேலும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைத்தொடா்பு கருவிகள் மற்றும் சாதனங்கள் ஆகியவற்றையும் காண்பிக்க வேண்டும். படகுகளில் பதிவு எண் தெளிவாக தெரியும் வண்ணம் எழுதி இருத்தல் வேண்டும். படகு அரசால் நிா்ணயிக்கப்பட்ட வா்ணத்தில் இருத்தல் வேண்டும்.
இந்த ஆய்வில் காட்டப்படாத நாட்டுப் படகுகளுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் நிறுத்தப்படுவதுடன், அந்தப் படகுகள் பதிவு சான்றை உரிய விசாரணைக்குப்பின் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆய்வு நாளான்று படகை ஆய்வுக்கு உட்படுத்தாமல், மற்றொரு நாளில் படகினை ஆய்வு செய்யக் கோரும் படகு உரிமையாளா்களின் கோரிக்கை ஏற்கப்படாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...