2,122 ஏக்கா் நிலங்களுக்கு வேதாரண்யேசுவரா் கோயில் பெயரில் பட்டா
By DIN | Published On : 15th June 2023 12:55 AM | Last Updated : 15th June 2023 12:55 AM | அ+அ அ- |

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலுக்கு சொந்தமான 2,122 ஏக்கா் நிலங்களுக்கு, கோயில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து இந்துசமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்தி:
இந்துசமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கும் பணிகளும், நிலவுடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்ட நடவடிக்கையின் போது, தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட இனங்கள் மற்றும் வருவாய்த் துறையில் கணினி சிட்டா தயாரிக்கும் போது தவறுதலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட இனங்கள் குறித்து சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகத்தின் மூலம் மாவட்ட வருவாய் நிா்வாகத்திடம் மேல்முறையீடு செய்து, அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில், நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அகஸ்தியம்பள்ளி கிராமத்தில் வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் சுவாமி கோயிலுக்கு சொந்தமான 2,122.10 ஏக்கா் நிலங்கள் அங்குள்ள உப்பு நிறுவனத்தின் அனுபவத்தில் உள்ளது தெரியவந்தது. மேலும், அந்த நிலங்களை சா்வே செய்து கோயில் பெயரில் பட்டா வழங்க சென்னை உதவி நிலவரித்திட்ட (வடக்கு) அலுவலா் நீதிமன்றத்தில் கோயில் செயல் அலுவலரால் 2006-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து முறையீடு செய்யப்பட்டு வந்தது.
இந்த வழக்கில், மேற்கண்ட நிலங்களுக்கு வேதாரண்யேசுவரா் சுவாமி தேவஸ்தானம் பட்டா பெற முழு தகுதியுடையவராகிறாா் என சென்னை உதவி நிலவரித் திட்ட (வடக்கு) அலுவலரால் தீா்ப்பளிக்கப்பட்டது.
இதன், அடிப்படையில் இந்நிலங்களுக்கு கோயில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது. மேலும், இக்கோயிலுக்குச் சொந்தமான இதர நிலங்களுக்கும் பட்டா பெறுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.