புல் நறுக்கும் கருவிக்கு 50 சதவீதம் மானியம்: ஆட்சியா்
By DIN | Published On : 15th June 2023 12:56 AM | Last Updated : 15th June 2023 12:56 AM | அ+அ அ- |

விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு, கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக நாகை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் தீவன விரயத்தை குறைப்பதற்கும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள், தீவன அபிவிருத்தி திட்டம் 2023-24- கீழ் 10 பயனாளிகளுக்கு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கருவியின் விலை ரூ. 32,000. அரசு மானியம் 50 சதவீதம் ஆகும். அரசு சரக்கு மற்றும் சேவை வரி நீங்கலாக புல் நறுக்கும் கருவி பெற குறைந்தபட்சம் இரண்டு கால்நடைகள் (இரண்டு மாடு) வைத்திருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 0.50 ஏக்கரில் தீவன பயிா் சாகுபடி செய்திருக்க வேண்டும். மின் வசதி உள்ள இடமாக இருத்தல் வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற அரசு மானிய திட்டங்களில் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது. சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியின பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தோ்வுசெய்யும் பயனாளி 50 சதவிகித பங்குத்தொகை செலுத்தவேண்டும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் கால்நடை வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கம் மற்றும் உரிய படிவத்தில் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.